"இதோ உலக முடியுமளவும் நாம் உங்களோடு இருக்கிறோம்" (அர்ச். மத்தேயு 28:20) தம்மால் நேசிக்கப்பட்ட ஆடுகளுக்காகத் தமது உயிரைக் கொடுத்த நல்ல ஆயனானவர், தாம் மரணமடைந் தாலும் நம்மை விட்டுப் பிரியாமலிருக்கத் திருவுளமாகி, நம்மைப் பார்த்து, நம்மால் மிகவும் சிநேகிக்கப்படும் ஆடுகளே, இதோ நாம் உங்களோடு எப்பொழுதும் வாசமாயிருக்கிறோம். உங்களைக் குறித்தே நற்கருணையில் உலகத்திலிருக்கிறோம். நமது தரிசனையால் உங்களுக்கு ஆறுதல் சகாயமாயிருக்க நாம் திருவுளமாயிருக்கிறதினால் உங்களுக்கு வேண்டுமென்கிற போது நமது தரிசனையைக் காணலாம். உலகத்தில் மனிதர் இருக்கு மளவும் நாமும் உலகத்தை விட்டுப் பிரியாமல் மனிதரோடு வாசமாயிருப்போமென்று திருவுளம்பற்றி வருகிறார். தூர தேசத்தில் போகிற பத்தாவானவர் தாம் இல்லாத சமயத்தில் தமது பத்தினி தனித்திராமல் தாமே தேவ நற்கருணையில் எழுந்தருளித் தமது பத்தினிக்குத் துணையாயிருக்கத் திருவுளமாயினார் என்று அர்ச். அலெக்சாந்தர் இராயப்பர் வசனித்திருக்கிறார்.
செபம்:
நன்மை நிறைந்த கர்த்தாவே! சிநேகம் நிறைந்த பிதாவே! இப்பொழுது நான் உம்மை சந்திக்கிறதற்குப் பதிலாய், நான் தேவநற்கருணையை உட்கொள்ளும் பொழுது தேவரீரும் என்னைச் சந்திக்க வருகிறீர். தேவரீர் என்னைச் சந்திக்க வருமளவில் உமது தரிசனையை எனக்குத் தந்தருளுகிறதும் அல்லாமல் உம்மைத்தானே எனக்குப் போசனமாகக் கொடுத்து, என்னோடு உறவாடத் திருவுளமான என் சேசுவே, உம்மை முழுதும் எனக்குக் கையளிக்கிறதினால் நீர் இப்பொழுதும் என்னிடத்திலிருக்கிறீர் என்று உண்மையாகச் சொல்லுகிறேன். தேவனாயிருக்கிற நீர் தாமே உம்மை முழுதும் எனக்குக் கையளிக்கிறதினால், நிலத்தின் குப்பையில் உதிக்கும் புழுவுக்குச் சமானமாயிருக்கிற நானும் என்னை முழுதும் உமக்குக் கையளிக்க ஞாயமல்லவோ? ஆ, என் தேவ சிநேகமே! நான் வார்த்தையால் மாத்திரம் உமக்கு முழுதும் சொந்தமாயிருக்கிறேன் என்று சொல்லாமல், உண்மையாகவே கிரியையினால் உமக்கு முழுதும் சொந்தமாயிருக்கிறேன் என்று சொல்லும் காலம் எப்பொழுது வரும்? சேசுவே! இது உம்மால் ஆகுங்காரியமாகையால் நீர் எனக்காக சிந்தின உதிரத்தின் பேறுகளைப் பார்த்து, என் நம்பிக்கையை உறுதிப்படுத்தி நான் மரணம் அடையா முன் ஒரு விதத்திலும் நான் என்னுடையவன் என்று இராமல், முழுதும் உம்முடையவனாயிருக்கச் செய்யும். சகல மனிதர் குரலுக்கு திருச்செவி கொடுக்கும் கர்த்தாவே, உமது சிநேகத்தை வருந்திக் கேட்கும் என் அபயக் குரலுக்கு செவி கொடும். ஆண்டவரே, நான் என் பலமெல்லாம் கொண்டு உம்மைச் சிநேகிக்கவும், பிரயோசனமும், ஆறுதலும், சம்பாவனையுமில்லாமல் உமது திருவுளத்திற்கு முழுதும் கீழ்ப்படிந்திருக்கவும், சிநேகத்தைப் பற்றி மாத்திரமே ஊழிய பணிவிடை செய்து வரவும், என் மேலுள்ள சிநேகம் அக்கினிமயமாய்ப் பற்றி எரியவும், உமது திரு இருதயத்திற்கு மாத்திரமே பிரியப்படவும் ஆசிக்கிறேன். உமது சிநேகமே அடியேனுக்கு சம்பாவனையாயிருக்க மன்றாடுகின்றேன். பிதாவின் பிரிய சுதனான சேசுவே, என் மனச் சுதந்தரத்தையும் என்னையும் தானே முழுதும் உமக்குள் ஐக்கியப்படுத்தும். சேசுவே! நான் உம்மையே தேடி உம்மையே ஆசித்து, உம்மை மாத்திரமே சிநேகிக்க மன்றாடுகிறேன். உம்மையல்லாமல் எனக்கு வேறொன்றும் வேண்டாம், உம்மை மாத்திரமே எனக்குத் தந்தருளும்.
மனவல்லயச் செபம்:
சேசுவே! நான் முழுதும் உமக்குச் சொந்தமாயிருக்கச் செய்யும்.
தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:
நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்.
தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.
சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.
பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)
நிந்தை பரிகாரச் செபம்:
எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.
தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.