23, எனக்கு வரும் நன்மை எல்லாம் தேவநற்கருணையைக் கொண்டு வருகிறதென்று கண்டேன்!

சேசுநாதர் பிறந்த மலையின் அடிவாரத்திலிருக்கிற மாட்டுக்கொட்டிலையும் அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த கல்வாரி மலையையும், அவரை அடக்கம் செய்த நவமான கல்லறையையும் தரிசிக்க அநேகமாயிரும் பேர் மகா பிரயாசையோடு மிகுந்த ஆபத்துக்குள்ளாகித் தூர யாத்திரை செய்கிறார்கள். அவர் தாமே நம்மீது வைத்த கிருபையினால் நமது வீட்டுக்கு அருகாமையில் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கிறதினால், நாம் அவ்வளவு தூர யாத்திரை போகவும், அவ்வளவு ஆபத்திற்கு உடன்பட்டு நடக்கவும் வேண்டியதில்லை. அப்படிப்பட்ட தூர யாத்திரை செய்கிறவர்கள், சேசு நாதர் பிறந்த மாட்டுக் கொட்டிலிலும் அவரை அடக்கம் செய்திருந்த கல்லறையிலுமிருந்து கொஞ்சம் மணல் கொண்டுவரவும் கூடுமானால், ஏதோ தங்களுக்குப் பெரிய பாக்கியம் கிடைத்த தென்று நினைக்கிறார்கள். அவர்கள் அப்படி நினைக்கும் பொழுது தேவநற்கருணையில் எழுந்தருளி இருக்கிற சேசுநாதரை நாம். மகா எளிதாய்க் காணக் கூடுமாயிருக்கையில், நாம் எவ்வளவு அதிக ஆவலாய் அவரைக் கண்டு தரிசிக்கவேண்டி இருக்கிற தென்று அர்ச். பொலினுஸ் என்பவர் வசனித்திருக்கிறார். தேவ நற்கருணையின் பேரில் மகா பக்தியாயிருந்த ஒரு கன்னியாஸ்திரி யானவள் அத்தேவநற்கருணையின் பேரில் பலர் நிருபம் எழுதுமிடத்தில் அவள் ஒரு நிருபத்தில் எழுதியிருக்கிறதாவது: "நான் என்னை முழுதும்தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் சேசுநாதருக்கு பாத காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறேன். எனக்கு வரும் நன்மை எல்லாம் தேவநற்கருணையைக் கொண்டு வருகிறதென்று கண்டேன். அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய இஷ்டப்பிரசாதங்களைத் தேவநற்கருணையினிடத்தில் தேடாமையினால், அநேகம் இஷ்டப்பிரசாதம் கொடுக்கப்படாமல் இருக்கிறதென்று கண்டுவருகிறேன். இந்த தேவநற்கருணையில் சர்வேசுரனுடைய வல்லமை விளங்குகிறதைவிட மற்றெதனிடத்தில் இவர் வல்லமை அதிகமாய் விளங்குகிறது? நமக்குத் செய்து வருகிறதெல்லாம் இந்தத் தேவநற்கருணையில் அடங்கி இருக்கிறது. மோட்சத்திலிருக்கிற ஆண்டவர்தாமே பூலோகத்திலும் இருக்கிறது மல்லாமல், மோட்சத்தை விட பூலோக்தில் அதிக ஆச்சரியமான சிநேகம் விளங்குகிறதினால், மோட்சவாசிகளுடைய பாக்கியத்தை நாம் நினைத்து நமக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டியதில்லை. நீர் யாரோடு பேசுவீரோ அவர்கள் எல்லோரும் தங்களைத்தாமே தேவநற்கருணைக்கு முழுதும் பாதகாணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் செய்யும். இந்த தேவநற்கருணை என்னை நானே மறந்து போகச் செய்கிறதினால் இப்படிச் சொல்லுகிறேன். நாம் இத்தன்மையாய் சிநேகிக்க வேண்டிய நியாயமுள்ள தேவநற்கருணையின் பேரில் பேசாமலிருக்க என்னால் முடியவில்லை. தேவநற்கருணையில் எழுந்தருளி இருக்கும் சேசு நாதருக்கு நான் இன்னது செய்யத் தக்கதென்று எனக்குத் தெரியவில்லை. ஆ, விலைமதிக்கப்படாத திரவியமே," என்று நிருபத்தை முடித்திருக்கிறாள். 

செபம்

தேவசிநேகம் அக்கினிமயமாய்ப் பற்றி எரிந்து ஆண்டவர் சமூகத்தில் நிற்கும் பக்திச் சுவாலகரே, பரலோக இராசாவானவர் உங்களைப்பற்றி பூலோகத்தில் தேவநற்கருணையில் எழுந்தருளி இராமல், என்னைப்பற்றி எழுந்தருளி இருக்கிறதினால் உங்களைப் போல நானும் தேவ சிநேக அக்கினிமயமாய்ப் பற்றி எரிய எனக்கு உதவி செய்து என் இருதயத்தில் அக்கினிச் சுவாலையை மூட்டுங்கள். சேசுவே, நான் உம்மை அதிகமதிகமாய் நேசிக்கவும், உமக்குப் பிரியப்படவும், நீர் மனிதரிடத்தில் வைக்கும் அளவில்லாத சிநேகத்தை நான் கண்டுபிடிக்கவும் தயை செய்யும். மகா சிநேகத்திற்குப் பாத்திரமான சேசுவே, நான் உமக்கு மாத்திரமே பிரியப்படவும் உம்மை மாத்திரமே எப்போதும் சிநேகிக்கவும் விரும்புகிறேன்.

மனவல்லயச் செபம்:

சேசுவே! உம்மையே நேசிக்கிறேன். உம்மையே நம்புகிறேன், உம்மையே விசுவசிக்கிறேன், உமக்கே முழுதும் என்னை பாதகாணிக்கையாக வைக்கிறேன்.

தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:

நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன். 

தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.

சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.

பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)

நிந்தை பரிகாரச் செபம்:

எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.

தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.