19, இந்தக் கண்ணீர்க் கணவாயிலே துக்கச் சமுத்திரத்தில் அமிழ்ந்தியிருக்கிற நமக்கு ஆறுதல்!

மனிதர் தங்கள் மனதிற்குச் சரிப்பட்டவர்களோடு மகா அகமகிழ்ச்சியாய்ப் பேசி பழகி வருகையில், இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபிக்கும் நீசப் பாவிகளாயிருக்கிற நமது பேரில் தயவாய் நமக்கு அநேகம் உபகாரங்களைச் செய்யவேண்டு மென்கிற ஆசையால், நமது பேரில் வைத்த சிநேகமிகுதியால் இரவும் பகலும் நம்மை விட்டுப் பிரியாமலிருக்கும் பிராண சிநேகிதராகிய சேசுகிறீஸ்துநாதரோடு மாத்திரமே பேசிப் பழகிக் கொண்டிருக்கக் கிறீஸ்துவர்களுக்குப் பிரியமில்லாமலிருக்கிறது. தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் பிராண சிநேகிதராகிய சேசுகிறீஸ்துநாதரோடு எப்போது வேண்டுமோ அப்போது தாராளமாய்ப் போகவும், என்ன மன்றாட்டு வேண்டுமோ அதை நம்பிக்கையுடன் தாராளமாய் கேட்கவும் எல்லோருக்கும் கூடுமாயிருக்கிறதல்லவா? வேதத்தில் வசனித்திருக்கிறதைப் போல ஜோசப் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கையில் சர்வேசுரன் அவர் அடைக்கப்பட்டிருக்கும் காவல் கூடத்தில் கூட இறங்கினதினால் அவர் பாக்கியவானானார். இந்தத் துக்கச் சமுத்திரத்தில் அமிழ்ந்தியிருக்கிற நமக்கு ஆறுதல், சந்தோஷம் வருவிக்க, நமக்காக மானிட தேகம் கொண்ட சேசுநாதர் நமது பேரில் வைத்த இரக்கத்தினாலும், சிநேகத்தினாலும், நம்மை விட்டுப் பிரியாமலிருக்கிறதினால் நாம் எவ்வளவு அதிக பாக்கியம் பெற்றவர்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. சிறைப் பட்டிருக்கிறவனுக்கு ஆறுதல் சொல்லவும், தைரியம் வருவிக்கவும், உதவி சகாயம் செய்யவும் அந்தச் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப் பிரயாசைப்படவும் ஒரு சிநேகிதன் கிடைத்தால் அவனுக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கும். அது போல தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கிற சேசுநாதர் மிகுந்த கிருபா நோக்கத்தால் நம்மைப் பார்த்து "இதோ உங்களுக்கு ஆறுதல் சொல்லவும், உங்களுக்கு உதவி சகாயமாயிருக்கவும், உங்களை மீட்டு இரட்சிக்கவும் பரலோகத்திலிருந்து உங்கள் சிறைச்சாலையாகிற உலகத்தில் இறங்கி வந்தோம். நீங்கள் நம்மைக் கையேற்று நமது பக்கமாய் நம்மோடு சேர்ந்தால் உங்கள் நிர்பாக்கியமெல்லாம் நீங்கிப் போகிறதல்லாமலும், உங்களுக்கு எந்நாளும் சம்பூரண திருப்தியுண்டாக வான இராச்சியத்திற்கு கூட்டிக்கொண்டு போகவும் வந்திருக்கிறோம்" என்று திருவுளம் பற்றுகிறார்.

செபம்

ஆ சிநேகமே! ஒருவராலும் கண்டுபிடிக்க இயலாத சிநேகமே! மனோவாக்குக்கெட்டாத சிநேகமே! நன்மை நிறைந்த சிநேகமே! எங்களோடு வாசம் செய்யப் பரலோகத்திலிருந்து இந்தப் பீடத்தில் இறங்கி வரத் திருவுளமானதினால், உம்மை என்னால் ஆன மட்டும் தாழ்ச்சி வணக்கத்தோடு சந்தித்து நமஸ்கரித்து வரவும், மோட்சவாசிகளுக்கு ஆனந்த சந்தோஷம் கொடுக்கும் உமது திருச் சமூகத்தில் இடைவிடாதிருக்கவும் ஆசை கொண்டேன். நான் எப்போதும் உமது திருச் சமூகத்திலிருந்து உம்மை சிநேகித்து வாழ்த்தி ஸ்துதித்து வணங்கி நமஸ்கரித்திருக்கக் கூடுமானால் அல்லோ தாவிளை. ஆண்டவரே, சோம்பலினாலும், உலகக் கவலையினாலும் உம்மைச் சந்திக்க அசட்டையாய் நித்திரை செய்யும் என் ஆத்துமத்தை தட்டி எழுப்பி விடும். இந்தச் சிநேக தேவத்திரவிய அனுமானத்தை விட்டு ஒருபொழுதும் பிரியாதிருக்கச் சிநேக அக்கினித் தணலை மூட்டியருளும். சிநேகத்திற்குப் பாத்திரமான சேசுவே! நான் உம்மை எப்போழுதும் சிநேகியாமல் போனதென்ன? உமக்கு மாத்திரமே பிரியப்பட முயலாமலிருந்த தென்ன? நான் மறுலோகத்தில் உம்மை சிநேகிக்கிறதல்லாமல் இவ்வுலகத்தில்தானே உம்மை சிநேகிக்கவும் உமக்குப் பிரியப்பட நடக்கவும், இன்னும் எனக்குக் காலம் கிடைத்ததினால் பாக்கியம் பெற்றவனானேன். சேசுவே! என் பாக்கியமே! என் சந்தோஷமே! என் செல்வமே! என் சிநேகமே! உம்மையே நேசிக்கிறேன். உமக்கு மாத்திரமே பிரியப்பட முயற்சிக்கிறேன். 

மனவல்லயச் செபம்:

 என் தேவனே! நாங்கள் உம்மைச் நேசிக்கத் தயைசெய்தருளும்.

தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:

நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன். 

தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.

சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.

பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)

நிந்தை பரிகாரச் செபம்:

எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.

தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.