"சரீரம் இருக்கிறவிடத்தில் அண்டரண்ட பட்சிகளும் சேரும்." (அர்ச். லூக்கா. 17:37) சரீரம் என்பது சேசு கிறீஸ்துவின் சரீரத்துக்கு அர்த்தமென்றும், அண்டரண்ட பட்சிகள் உலக காரியங்களை ஒழித்து வான இராச்சியத்தை நோக்கி அதுவே சிந்தையாய் அதனிடத்தில் ஆசையெல்லாம் வைத்திருக்கும் ஆத்துமங்களுக்கு அர்த்தமென்றும் ஞானத்தில் தெளிந்த மகாத்துமாக்கள் வசனித்திருக்கிறார்கள். அண்டரண்ட பட்சியைப் போலிருக்கும் புண்ணிய ஆத்துமாக்கள் உலகத்தில் தேவ நற்கருணையில் எழுந்தருளியிருக்கிற சேசுநாதரிடத்தில் ஆனந்த சந்தோஷம் அடைகிறார்கள் என்கிறதினால், அவரைவிட்டுப் பிரிய மனதில்லாமல் எப்போதும் அவர் திருப்பாதங்களை விட்டுப் பிரியாமல் காத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அர்ச். எரோணிமுஸ் வசனித்ததைப் போல, அண்டரண்ட பட்சிகள் எத்தனை தூரத்திலிருந்தாலும் பிரேதத்தின் வாசனையைப் பிடித்துப் பறந்தோடி வருமென்கிறதினால், தேவநற்கருணையில் எழுந்தருளி நமது ஆத்தும போசனமாயிருக்கிற சேசுநாதரிடத்தில் நாம் எத்தனை ஆவலாய்ப் பறந்து வரவேண்டியிருக்கிறது. தாகத்தால் தவிக்கும் போது தண்ணீர்ச் சுனையை ஆவலோடு தேடுவதுபோல இந்தக் கண்ணீர் கணவாயிலிருக்குமளவும் அர்ச்சியசிஷ்டவர்கள் ஆவலோடு தேவநற்கருணையைத் தேடிவந்தார்கள். சேசு சபையில் உட்பட்ட மகாத்துமாவான பலத்தாஸ் அல்வாரேஸ் என்ற குருவானவர் எந்தவிடத்திலிருந்தாலும் தேவநற்கருணை ஸ்தாபித்திருக்கும் கோயிலுக்கு நேராய் அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டு வருகிறதுமல்லாமல், தம்மால் கூடினமட்டும் அடிக்கடி தேவநற்கருணையின் முன்பாகப் போய்ச் சந்தித்து, பலமுறை இராமுழுதும் சேசுநாதர் பாதத்தில் காத்திருப்பார். பின்னும் அழிந்து போகிற உலக சம்பத்துகளுக்கு ஆசைப்பட்டுப் பிரபுக்கள் இராசாக்கள் அரண்மனையில் எத்தனை ஆயிரம்பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அழியாத நன்மைகளைத் திரளாய்த் தந்தருள இவ்வளவு ஆவலாய் நம்மிடத்தில் காத்துக் கொண்டிருக்கிற அதிபதி இராசாவான சேசுநாதர் எழுந்தருளி யிருக்கும் தேவலாயத்தில் ஒருவருமில்லாமல் பாழடைந்தால் போலிருக்கிறதைக் கண்டு மனந் தாளாமல் திரளாய்க் கண்ணீர்ச் சொரிவார். சந்நியாசிகள் தங்கள் மடத்தை விட்டு வெளியில் புறப்படாமலே இரவும் பகலும் தேவநற்கருணையைச் சந்தித்துக் கொண்டு வரலாமென்கிறதினால், அவர்களுக்கு ஆனந்த பாக்கியமென்றும் வசனித்துக் கொண்டுவருவார்.
செபம்
தயை நிறைந்த கர்த்தாவே! என் நன்றி கெட்டத் தன்மையையும், உமது சிநேகத்தையும் நான் கணக்கில் வைக்கா மலிருந்ததைப் பாராமல், இத்தனை அன்போடும் தயையோடும் என்னை உமது அருகில் வரவழைக்கிறதினால் என் நிர்ப்பாக்கி யத்தைக் கண்டு நான் மனம் தளராமல், உமது திருப்பாதத்தை நாடி வருகிறேன். ஆண்டவரே, உம்மை நாடாத சிநேகமெல்லாம் என் இருதயத்திலிருந்து பறித்தெறியும். உமக்குப் பிரியமில்லாத ஆசையும், உம்மைத் தேடாத நினைவும் என்னை விட்டு அகலச் செய்யும். சேசுவே! என் சிநேகமே, என் பாக்கியமே, என் சம்பத்தே, நான் உமக்கு மாத்திரமே ஒத்து நடக்கவும், உமக்கு மாத்திரமே பிரியப்படவும் ஆசைப்படுகிறேன். ஆண்டவரே, உலக காரியத்தில் எனக்குள்ள ஆசாபாசமெல்லாம் அறுத்தெறிந்து அநித்தியத்திலும் நித்தியத்திலும் நான் உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல் என்னை உம்மோடு இறுகக் கட்டியருளும்.
மனவல்லயச் செபம்:
என் மதுர சேசுவே! என்னை ஒருபொழுதும் உம்மைவிட்டு அகலச் செய்யாதேயும்.
தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:
நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்.
தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.
சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.
பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)
நிந்தை பரிகாரச் செபம்:
எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.
தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.