"அந்நாளில் தாவீதின் சந்ததியாருக்கும் ஜெருசலேம் பட்டணத்தாருக்கும் தங்கள் பாவங்களைச் சுத்திகரிக்கத் திறந்த சுனை உண்டாகும்." (சக்கரியாஸ்: 13-ம் அதிகாரம்) தினந்தோறும் நாங்கள் கட்டிக் கொண்ட பாவக்கறைகளை வேண்டிய மட்டும் சுத்திகரிக்க திறந்த சுனை போலத் தேவநற்கருணையில் சேசுநாதர் எழுந்தருளியிருப்பார் என்கிறதைத் தீர்க்கதரிசியானவர் ஏற்கனவே வசனித்திருக்கிறார். நாம் யாதொரு தப்பிதத்தில் விழுந்த உடனே தேவநற்கருணையைச் சந்திக்கிறதை விட அதிக உன்னத மதுரமான அடையாளம் என்னவிருக்கிறது? அர்ச். தெரேசம்மாள் காலத்திலிருந்த மகா புண்ணியவதியான தியாஸ் மரியம்மாள் என்பவள் அவிலா என்ற பட்டணத்து மேற்றிராணியார் உத்தரவுப் படி கோயிலில் ஒரு இடத்தில் இரவும் பகலும் எப்பொழுதும் வாசமாயிருந்து, பாவசங்கீர்த்தனம் செய்யவும் தேவநற்கருணையை உட்கொள்ளவும், வேண்டும் பொழுது மாத்திரமே தாமிருக்கும் இடம் விட்டு அப்புறம் போவாள். சேசுவின் பிரான்சீஸ்கென்று சொல்லப்பட்ட உத்தரிய மாதா சபைச் சந்நியாசியானவர் தேவநற்கருணை ஸ்தாபித்திருக்கும் கோயில்கள் முன்பாகப் போகும் பொழுது, சிநேகிதனை கண்டு ஒரு வார்த்தையாகிலும் சொல்லாமல் போகிறது நியாயமல்ல என்று சொல்லி, கோயிலில் நுழைந்து தம்மால் மிகவும் நேசிக்கப்பட்ட ஆண்டவர் சமூகத்தில் எந்நேரம் இருக்க வேண்டுமோ அந்நேரம் வரை இருப்பார்.
செபம்
சேசுவே, இந்தச் சுனையின் ஜலத்தினால் என் பாவக் கறைகளைச் சுத்திகரிக்கலாம் என்கிறதும் அல்லாமல், எனக்கு வேண்டிய ஞானத் தெளிவும், இனி பாவத்தில் விழாமலிருக்க வேண்டிய திடனும், தேவ சிநேக அக்கினிச் சுவாலையும் அந்த ஜலத்தினால் எனக்கு வருமென்று நான் அறிந்திருக்கிறதினால், தேவநற்கருணையை எப்பொழுதும் நாடி வர ஆசை கொண்டேன். நான் உம்மைச் சந்திக்க ஆவல் கொள்ளும்படி அல்லவோ உம்மைச் சந்தித்து வரும் ஊழியர்களுக்கு இத்தனை ஏராளமான நன்மைகளைச் செய்து வருகிறீர். ஆராதனைக்குப் பாத்திரமான சேசுவே! உமக்கு ஏற்காத பாவங்களைச் செய்ததினால் மிகவும் விசனப்படுகிற என் பாவக்கறைகளைச் சுத்திகரித்து, இனி நான் பாவத்தில் விழாமலிருக்கவும், நான் உம்மை நேசிக்கவும் ஆசையைத் தந்தருளும். ஆண்டவரே, உமதருகில் இடைவிடா திருக்கப் பேறுபெற்றவர்களல்லவோ பாக்கியவான்கள்! என் ஆசைக்குரிய அன்பரே! என் பாக்கியமே, நான் உம்மை நேசிக்க நீர் இந்த சிநேக தேவத்திரவிய அனுமானத்தை ஸ்தாபித்து அதில் வாசமாய் எழுந்தருளியிருக்கிறீரென்றும், உம்மை ஆவலாய் நேசிக்கத்தக்க இருதயத்தை எனக்குக் கட்டளையிட்டிருக்கிறீர் என்றும் நான் நன்றாய் அறிந்திருக்கையில், நன்றிகெட்டத் துரோகியாகிற நான் உம்மைச் நேசியாமலிருக்கிறதும், இவ்வளவு அற்பமாய் நேசிக்கிறதுமென்ன? மட்டற்ற சிநேகத்திற்கு பாத்திர மான அளவற்ற நன்மையை இவ்வளவு அற்பமாய் நேசிக்கிறது நியாயமோ? சிநேகத்திற்குச் சிநேகம் ஈடாக வேண்டியதினால் நீர் மட்டற்ற பரம கடவுளுமாய், நான் நிலத்தின் குப்பையில் உதிக்கும் புழுவுக்குச் சமானமுமாயிருக்கையில் உமது சிநேகத்திற்கு நான் ஈடான சிநேகம் காண்பிக்கிறதெப்படி? நீர் எனக்காகத் தேவநற்கருணையில் மறைவாயும், வெறுமையாயுமிருக்கையில், நான் உமக்காக என் பிராணனைச் செலவழிக்கிறதும், உமக்காக மறைவாயும், வெறுமையாயும் போகிறதும் பெரிய காரியமோ? எல்லாவற்றிற்கும் மேலாய்ப் பழுதற்ற விதமாய்ச் நேசிக்கப்படத் தேவரீர் பாத்திரமாயிருக்கிறதினால், நான் உம்மை எல்லா வற்றிற்கும் மேலாய்ப் பழுதற நேசிக்க விரும்புகிறேன். சேசுவே! நான் வேண்டியபடி உம்மை நேசிக்கவும், உமது திருவுளத்திற்கு இசைந்தபடி நடக்கவும் எனக்கு தயை செய்தருளும்.
மனவல்லயச் செபம்:
என் அன்பர் என் வசமாகவும் நான் அவர் வசமாகவும் இருக்கிறோம்.
தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:
நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்.
தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.
சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.
பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)
நிந்தை பரிகாரச் செபம்:
எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.
தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.