நம்மை அடைந்தவன் சீவியம் அடைவான் - (உவமைச் சொல் 8ம் அதிகாரம்) "சேசுநாதரிடத்தில் மாத்திரம் நீங்கள் தேடும் நன்மை யாவும் குடிகொண்டிருக்கையில், மதிகெட்ட மனிதரே, நீங்கள் எங்கே போகிறீர்கள்? எவற்றைத் தேடுகிறீர்கள் என்று அர்ச். அகுஸ்தீன் என்பவர் கூக்குரலிடுகிறார். என் ஆத்துமமே, நீயும் உலகத்தாரைப் போல பயித்தியங்கொண்டு அலையாமல், எல்லா நன்மையும் கொண்டிருக்கிற மேன்மையான சர்வேசுரனை மாத்திரமே தேடு. நீ அவரைத் தேடுகிறது மெய்யானால், உன் மன்றாட்டைக் கேட்கவும் உனக்கு ஆறுதல் கட்டளையிடவும், இதோ இந்தப் பீடத்தில் எழுந்தருளி உன் அருகிலிருக்கிறார். அர்ச். தெரேசம்மாள் வசனிக்கிறது போல, உலக இராசாக் களிடத்தில் யார் வேண்டுமோ அவர்கள் தடையின்றிப் போய்த் தங்கள் காரியங்களைத் தாங்களே பேசிக்கொள்ளக் கூடாதிருக் கிறதும் அல்லாமல், வேரொருவரைக் கொண்டு மனுப்பேசுகிறதும் தானே வழக்கமாயிருக்கிறது.
செபம்:
மகிமைப் பிரதாபமுள்ள இராசாவான சேசுவே! நீர் பாரபட்சமில்லாமல் சகல மனிதர் மன்றாட்டுக்குத் திருச் செவி கொடுத்துக் கேட்கவேண்டுமென்றும், எல்லோரோடும் முகமுகமாய்ப் பேசவேண்டுமென்றும் அல்லவோ இந்தப் பீடத்தில் எழுந்தருளியிருக்கிறீர். இராசாக்கள் குறிக்கப்பட்ட நாட்களில் மாத்திரம் அவரவர் பேச்சுகளுக்குச் செவிகொடுக்கிறார்கள். நீரோவென்றால் இரவும் பகலும் ஓய்வு ஒழிவு இல்லாமல் செவிகொடுத்துக் கேட்டு வருகிறீர். மகா சிநேக தேவனான சேசுவே! எத்தனையோ ஆயிரம் பேரை உமது மகா சிநேக அக்கினி மயமாய்ப் பற்றி எரியச் செய்தீர் சிநேகப் பலியே! மகா மேன்மையே, நான் உம்மையே கண்டு, உம்மையே நாடி இடைவிடாத உமது சிந்தையாயிருந்து, உமது சிநேகத்திற்கு அடிமைப்பட்டிருக்கவும் ஆசைப்படும் என் இருதயத்தை உமது சிநேகப் பாசத்தால் உமது அருகில் இழுத்தருளும். என் ஆசை, விருப்பம், நம்பிக்கை, பிரயோசனமெல்லாம் உமது கைவசப் படுத்து கிறேன். ஆண்டவரே! நீர் அவைகளைக் கையேற்றுக் கொண்டு உமது சம்மதத்தின்படி நடத்தும். நீர் அடியேன் என்னை எப்படி நடத்தினாலும், எப்பொழுதும் என்பேரில் தயை நிறைந்த உமது திரு இதயத்திற்கு ஒத்த வண்ணம் நடத்துவீர் என்கிறதினாலும், எனக்கு அதிக நன்மை வரும்படி செய்வீர் என்கிறதினாலும், இனி நான் உமது பட்ச பராமரிக்கையின் பேரில் அற்பமும் முறைப்படேன். அநித்தியத்திலும், நித்தியத்திலும் உமது திருவுளத்திற்கு இசைவது என் மனதிற்கு இரம்மியாக இருக்கிறது எனக்கும் என்னைக் கொண்டும் நீர் செய்யத் திருவுளமாயிருக் கிறதெல்லாம் குறையில்லாமல் செய்து முடியும். ஆண்டவரே, ஆராதனைக்குப் பாத்திரமான சிநேகம் நிறைந்த உமது திருச்சித்தத்தோடு, என் மனதை முழுதும் ஒன்றித்திருக்கச் செய்கிறேன். மகா சிநேகத்திற்குப் பாத்திரமான என் ஆண்டவர் திருச் சித்தமே! நான் உன்னோடு ஐக்கியமாகச் சேர்ந்து சீவிக்கவும் மரிக்கவும் ஆசைப்படுகிறேன். உமக்கு இரம்மியமானதே எனக்கும் இரம்மியம். நீர் விரும்புகிறதை நானும் விரும்பச் செய்வீராக. என் பேரில் வைத்த சிநேகத்தால் உயிர்விடவும், எனக்குப் போசன மாகவும் திருவுளமான என் கர்த்தரே சுவாமீ, இனி நான் உமக்காக மாத்திரமே சீவிக்கவும், உமக்குச் சித்தமானதை மாத்திரமே விரும்பவும், சினேகத்திற்குப் பாத்திரமான உமது திருவுளத்தை மாத்திரமே சினேகிக்கவும், உமது சினேகத்தினால் மாத்திரமே உயிர்விடவும் கிருபை செய்யும். ஆண்டவரே! நான் உமது திருச் சித்தத்திற்கு மாறுபடேன். தாறுமாறாக இசைந்த வண்ணம் கடந்த காலமெல்லாம் பாழ்த்துப்போகக்கடவது. என் ஆண்டவரே, உம்மை நான் சிநேகிக்கிறேன், உம்மை என் முழு இருதயத்தோடு சிநேகித்து என்னை முழுதும் உமக்குப் பாத காணிக்கையாக வைக்கிறேன்.
மனவல்லயச் செபம்:
என் ஆண்டவர் திருவுளமே, நீரே எனக்குச் சிநேகமும் செல்வமுமாயிரும்.
தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:
நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்.
தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.
சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.
பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)
நிந்தை பரிகாரச் செபம்:
எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.
தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.