"கலாத்தென்ற மலையில் பரிமள தைலங்கள் அற்றதோ?" (ஜெரேமியா: 8-ம் அதிகாரம்) "காயங்கள் முதலானவைகளுக்குப் பரம சஞ்சீவியான சுகந்த பரிமள தைலங்கள் கலாத்தென்ற மலையில் ஏராளமாயிருக்கிறது. சேசுநாதசுவாமீ தேவநற்கருணை யில் நமது வியாதிகளுக்குப் பரம ஔஷதமாக எழுந்தருளியிருக் கிறார் என்கிறதற்குக் குறிப்பாயிருக்கின்றது" என்று மகாத்துமா வானபேதாவென்பவர் வசனித்திருக்கிறார். கடின பிரயாசைப் படு கிறவர்களும், பாரச் சுமை சுமக்கிறவர்களும் நம்மிடத்தில் வாருங்கள், நாம் உங்களுக்கு ஆறுதல் தந்தருளுவோமென்று திருவுளம்பற்றின தயாபர சுரூபியான சேசுநாதர் தாமே இப்பொழுது தேவ நற்கருணையில் எழுந்தருளி நம்மைப் பார்த்து: "கடின வியாதியால் வருத்தப்படும் ஆதித்தகப்பன் சந்ததிகளே, நீங்கள் வருத்தப்பட வேண்டியதென்ன? நல்ல வைத்தியனாகவும், பரம ஔஷதமாகவும் நாம் தேவநற்கருணையில் எழுந்தருளியிருக் கிறதினால், நம்மிடத்தில் வாருங்கள்" என்று அழைக்கிறார். மனிதர் தங்கள் வேதனைகளில் தேவநற்கருணையை அடுத்துப் போனால், ஒருபோதும் இத்தனை நிர்ப்பந்தப்படப்போகிறதில்லை.
செபம்
ஆண்டவரே, உம்மால் சிநேகிக்கப்பட்டவன் வியாதியாயிருக் கிறான் என்று இலசாரின் சகோதரிகள் சொன்னபடியே திவ்விய வைத்தியனே, உமது சொந்தப் பொருளாகிற என் ஆத்துமமும் பாவத்தால் காயப்பட்டுக் கடின வருத்தப்படுகிறதென்று சொல்லுகிறேன். ஆண்டவரே, நீர் அதைக் குணமாக்கத் திருவுளமும் வல்லமையும் உள்ளவர். ஆகையால் குணமாக்கி யருளும். என் மதுர சேசுவே! நான் உலகத்திற்கெல்லாம் அதிபதி கர்த்தனாயிருக்கிறதைவிட, உம்மோடு ஒருமித்திருக்க அதிக ஆசைப்படுகிறதினால் உமது சிநேக பாசத்தால் என்னை உமது அருகில் சேர்த்தருளும். நான் உம்மை நேசிக்க வேண்டும் என்கிற ஆசையொன்றேயல்லாமல், உலகத்தில் எனக்கு வேரொரு ஆசையுமில்லை. உமக்குக் கொடுக்க என்கையில் ஒன்றுமில்லை என்றாலும், உலகமெல்லாம் என் கைவசமானாலும் உம்மைப் பற்றி அதை முழுதும் இழந்துவிட ஆசையாயிருக்கிறேன். சேசுவே, உம்மைப்பற்றி நான் என் உற்றார், உறவின் முறையர், சேர்ந்தார், சிநேகிதர் எல்லோரையும் விட்டு விடுகிறதுமல்லாமல், இன்ப சுகத்தைமுதலாய் விட்டுவிடுகிறேன். என் புத்தியையும் மனதையும் இருதயத்தையும் தானே தேவரீருக்கு முழுதும் காணிக்கையாக வைத்துவிடுகிறேன். மட்டற்ற நன்மையே உம்மை நேசிக்கிறேன். என்னையும் மற்ற எல்லாவற்றையும் விட உம்மையே மேலாகச் சிநேகிக்கிறேன். நித்தியமும் உம்மை சிநேகித்திருப்பேன் என்று நம்பியிருக்கிறேன்.
மனவல்லயச் செபம்:
சேசுவே என்னை முழுதும் உமக்குக் கையளிக்கிறேன். இந்த நீசக் காணிக்கையைத்தள்ளி விடாதேயும்.
தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:
நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்.
தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.
சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.
பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)
நிந்தை பரிகாரச் செபம்:
எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.
தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.