30, உமது திரு முகத்தை ஏன் ஒளித்துக் கொள்ளுகிறீர்?

"உமது திரு முகத்தை ஏன் ஒளித்துக் கொள்ளுகிறீர்" (ஜோபு - 13-ம் அதிகாரம்.) சர்வேசுரன் தமது திரு முகத்தை ஒளித்துக் கொண்டது ஜோபென்கிற மகாத்துமாவானவருக்குப் பயங்கரமாக இருந்தது. சேசுநாதருக்கு நமது பேரில் உள்ள சிநேகம் அதிகமாய் விளங்கவும், நமக்கு அவர்பேரில் அதிக நம்பிக்கை பிறக்கவும், தேவநற்கருணையில் அவர் தமது மகிமைப் பிரதாபமெல்லாம் மறைத்து, பீடத்தின் பேரில் எழுந்தருளி இருக்கிறதினாலே, நமக்குப் பயங்கரமில்லாமல் போகவேண்டியதல்லாமல், அதிக நம்பிக்கையும் சிநேகமும் பிறக்கவேண்டி இருக்கிறது. பரலோக பூலோகத்திற்கு அதிபதி இராசாவானவர், தமது மகிமைப் பிரதாபமெல்லாம் பீடத்தில் விளங்கச் செய்துகொண்டிருக்கிறதினால், அவர் சமூகத்தில் செல்லாதவன் யார்? தன் இருதயத்தை அவருக்குத் திறந்து காண்பித்துத் தனக்குத் தேவையான நன்மைகளெல்லாம் அவரைத் தாராளமாய்க் கேட்கத் துணியாதவன் யார்? சேசுவே! உலகத்தில் உம்மை ஆவலாய்த் தேடுகிறவர்கள் கண்களால் தரிசிக்கவும், அவர்களால் சிநேகிக்கவும் வேண்டுமென்கிறதைப் பற்றி அப்பத்தின் குணங்களுக்குள்ளே நீர் மறைந்திருக்க எடுத்த உபாயம் யார் புத்திக்குள் அடங்குகிறது? மனிதர்பேரில் உமக்குள்ள சிநேகம் அதிகமாய் விளங்கும்படி நீர் எடுத்த ஆச்சரியமான உபாயத்தைக் கண்டு, இசையாசென்கிற தீர்க்கதரிசியானவர் வசனித்தாற்போல், உலகத்தின் சகல ஜனங்களும் சந்தோஷ அகமகிழ்ச்சியாய்க் கூவிப்பிரசித்தப்படுத்த வேண்டுமென்கிறார்.

செபம்

சகல மனிதர் இருதயத்தையும் ஆட்கொள்ளவேண்டிய மகா சிநேகத்திற்குப் பாத்திரமான என் சேசுவின் திரு இருதயமே! நிர்மல தேவ சிநேகம் நிறைந்த இருதயமே! சகலத்தையும் சுட்டெரித்துத் தகனமாக்கி எனக்கு நவமான உயிரையும் இஷ்டப்பிரசாதத்தையும் தந்தருளி, இனி நான் ஒருக்காலும் உம்மைவிட்டு அகலாதபடி என்னை உம்மோடு சேர்த்து அரவணைப்பீராக. பாவிகளுக்குத் தஞ்சமாகத் திறந்திருக்கும் இருதயமே, என்னை உமது அருகில் சேர்த்தருளுவீராக. உலகத்தினுடைய பாவங்களுக்காகச் சிலுவை மரத்தில் நொந்து உருகிய இருதயமே! என் பாவத்திற்கு மெய்யான மனஸ்தாபத்தை எனக்குத் தந்தருளுவீராக. சேசுவே! நீர் கபால மலையில் எனக்காக உயிர் விடும் பொழுது, என் பேரில் உமக்கு இருந்த சிநேகம் இப்பொழுதும் உமக்கு இருக்கிறதினாலும், உம்மை முழுதும் எனக்குத் தந்தருள வேண்டுமென்கிற ஆசைப்பெருக்கத்தால், இந்தத் தேவநற்கருணையில் எழுந்தருளி இருக்கிறதினாலும், உமது ஆசைக்கும் சிநேகத்திற்கும் இன்னும் நான் இடறு செய்கிறது எப்படி? சினேகத்திற்குப் பாத்திரமான கர்த்தாவே, உமது சிநேக ஈட்டியால் என் இருதயத்தைக் காயப்படுத்தும். உமது திரு இருதயத்தோடு என் இருதயத்தையும் ஒன்றித்துப் பந்தனமாக்கும். நான், உமது திருவுளத்திற்கு இயற்கையாய் நடக்க விக்கின மாயிருக்கும் ஆசாபாசம், மனச்சார்பு, சுக செல்வம் முதலான தெல்லாம் தேவரீருக்குப் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, உமது இஷ்டப்பிரசாத உதவியால் துணிந்திருக்கிறேன். ஆண்டவரே! இனி என் சிந்தனை, வாக்கு, கிரியை, மனதெல்லாம் உமது திருவுளத்திற்கு இயற்கையாய் நடத்த அநுக்கிரகம் செய்தருளும். தேவசிநேகமல்லாமல் என் இருதயத்தில் வேறொரு சிநேகமில்லாமல் அகலக்கடவது. சர்வேசுரனிடத்தில் வேண்டு மென்கிறதெல்லாம் குறையில்லாமல் தாராளமாய் அடைகிற பரிசுத்தத் தாயுமாய், என் நம்பிக்கைக்கு ஆதாரமுமாயிருக்கிற அர்ச். மரியாயே, நான் சேசுவின் நிர்மல சிநேகத்தால் உயிர்விடும்படி, எனக்கு வேண்டிய இஷ்டப்பிரசாதத்தைத் தந்தருள மன்றாடும். அநித்தியத்திலும் நித்தியத்திலும் நான் கேட்கும் மன்றாட்டை அடைய எனக்காக வேண்டிக் கொள்ளுவீரென்று முழுதும் நம்பியிருக்கிறேன்.

மனவல்லயச் செபம்: 

என் ஆண்டவர் அன்பினின்று என்னைப்பிரிக்க வல்லவர் யார்?

தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:

நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன். 

தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.

சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.

பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)

நிந்தை பரிகாரச் செபம்:

எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.

தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.

செபம்:

மனிதர்பேரில் மட்டற்ற சிநேகமுள்ள சேசுவே! நீர் மனிதரை ஈடேற்றும் நன்மையையும், மனிதர் உமக்குச்செய்யும் கபடங்களை யும் ஊன்றி நினைக்கும் போது, நான் நாண என் புத்தி தடுமாறிப் போகிறது. நீர் மனிதரை சிநேகிக்கிறீர். மனிதர் உம்மைச் சிநேகியாமல் போகிறார்கள். நீர் மனிதருக்கு எண்ணக்கூடர்த உபகாரங்களைச் செய்துவருகிறீர். மனிதர் உமக்கு வாக்குக் கெட்டாத நிந்தை அவமானத்தையே செய்துவருகிறார்கள். நீர் மனிதர்களை அழைக்கிறீர். மனிதர் திவ்வியமான தேவகுரலுக்கு செவி அடைத்து நிற்கிறார்கள். நீர் இஷ்டப்பிரசாத நன்மைகளை மனிதருக்கு வலியக்கொடுக்க, உமது திருக்கரத்தை நீட்டுகிறீர். மனிதர் உமது இஷ்டப்பிரசாதத்தைக் கையேற்றுக்கொள்ளமல் தட்டிவிடுகிறார்கள். என் ஆண்டவராகிய சேசுவே! இப்படிப்பட்ட நன்றிக்கெட்ட கொடிய நிர்ப்பாக்கியரில் நானும் ஒருவனாயிருக் கிறேன் என்கிறதினால், மிகவும் விசனப்பட்டு என் அக்கிரமங் களால் உமக்கு வந்த குறையை, இனி என் ஆயுசுபரியந்தம் என்னால் ஆனமட்டும் நிவர்த்திக்க துணிந்திருக்கிறேன். ஆண்டவரே, நான் உமக்குப் பிரியப்படச் செய்யவேண்டியது இன்னதென்று எனக்கு அறிவியும், உமக்கு நான் பிரியப்படும்படி என் உறவின் முறையார், சினேகிதர், உபகாரிகளையும், என் சரீர சுக செல்வப்பாக்கியங்களையும், என் உயிரையுந்தானே இழக்கவேண்டியிருந்தாலும், நல்ல மனதோடு அவைகளை எல்லாம் இழக்கு துணிந்திருக்கிறேன். உமக்கு மரியாதையும் தோத்திரமும் உண்டாக, எல்லாவற்றையும் பலி கொடுக்க ஆயத்தமாயிருக்கிறேன். உம்முடைய திருவுளத்திற்குப் பிரியமாக சேதப்படுத்துகிறதெல்லாம், பாக்கியமான சேதமல்லாமல் நஷ்டமான சேதமல்ல. என் ஆத்தும் அன்பரே, எல்லாவற்றிற்கும் மேலாகச் சிநேகிக்கப்படப்பாத்திரமான பரம நன்மையே, உம்மை எல்லாவற்றிலும் மேலாக அதிகமாய்ச் சிநேகிக்கிறேன். உமதுபேரில் சிநேக அக்கினிமயமாய்ப் பற்றி எரியும் உமது திருத்தாயார், பத்திச் சுவாலகர் இவர்களுடைய இருதயத்தோடு என் அற்ப இருதயத் தையும் ஒன்றாகச் சேர்த்து, உம்மைச் சிநேகிக்கத் தயை செய்யும். சேசுவின் திரு இருதயமே, நான் உம்மையே நேசிக்கிறேன், நித்திய காலமும் உம்மை அல்லாமல் வேறேரு பொருளையுஞ் நேசிக்க அறியேன்.

ஆண்டவரான கர்த்தாவே! நான் முழுதும் உமக்குச் சொந்தமுமாய், நீர் முழுதும் எனக்குச் சொந்த முமாயிருக்கக்கடவது. ஆமென்.