"சேசுநாதர் மரணபரியந்தம் தமது நித்திய பிதாவாகிய சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்" என்று அர்ச். சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதின நிருபம்: 2 ம் அதிகாரத்தில் புகழ்ந்து சொல்லுகிறார். தேவநற்கருணையைச் சந்திக்குமிடத்தில் சேசுநாதர் நித்திய பிதாவாகிய சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்ததல்லாமல், நீச மனிதருக்கும் கீழ்ப்படிந்து வருகிறார் என்கிறதினாலேயும், மரணபரியந்தம் கீழ்ப்படிந்ததல்லாமல், உலகம் முடியுமட்டும் கீழ்ப்படிந்து வருவார் என்கிறதினாலேயும், உலக அந்தகாரம் வரைக்கும் கீழ்ப்படிந்தார் என்று சொல்லவேண்டியிருக்கிறது. பரலோகத்திற்கு அதிபதி இராசாவானவர் மனிதருடைய வார்த்தைக்குப் பரலோகத்திலிருந்து இறங்கிப் பூலோகத்தில் எழுந்தருளிவருகிறார், மனிதருக்கு கீழ்ப்படிய மாத்திரமே பீடத்தில் எழுந்தருளியிருக்கிற, எங்கெங்கே வைக்கிறார்களோ அங்கங்கே யிருக்கிறார்! தெருக்களிலும், வீடுகளிலும் எங்கே கொண்டு போகிறார்களோ அங்கே போகிறார்! பாவிகளோ, புண்ணிய வான்களோ, யாருக்குத் தம்மைக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கொல்லாம் கொடுக்கப்படுகிறார். பூலோகத்தில் அவர் சஞ்சரித்த காலத்தில் அர்ச்சியசிஷ்ட மரியம்மாளுக்கும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து வந்தாரென்று அர்ச். லூக்கா என்பவர் எழுதியிருக்கிறார். தேவநற்கருணையிலோ வென்றால், உலகத்திலுள்ள சகல குருக்களுக்கும் கீழ்ப்படிந்து வருகிறார்.
செபம்
சகல தேவத்திரவிய அனுமானங்களுக்கும் விசேஷமாய் இந்தச் சிநேக தேவத்திரவிய அனுமானத்திற்கும் ஆலயமான ஆராதனைக்குப் பாத்திரமான உமது இருதயமல்லோ இப்படிப் பட்ட மேன்மையான சிரவணத்தைக் கற்பித்து வருகிறது! உம்மைப்போல் நானும் மனிதருக்குக் கீழ்ப்படிந்து, நீர் இந்த சிநேக தேவத்திரவிய அனுமானம் வழியாய், உமது நித்திய பிதாவாகிய சர்வேசுரனுக்கு வருவிக்கும் மரியாதை வணக்கமெல்லாம் நானும் வருவிக்க ஆசைப்படுகிறேன். நீர் எனக்காக வாதைப்பட்டுச் சிலுவை மரத்தில் உயிர்விடும்போது, உம்மிடத்தில் பற்றி எரிந்த என்பேரிலுள்ள சிநேகம் அப்பொழுது உம்மிடத்தில் குறை வில்லாதிருந்ததை அறிவேன். சிநேக அக்கினிச் சுவாலையான சேசுவின் திவ்விய இருதயமே! உம்மை அறியாதவர்களுக்கு உம்மை அறியவும், உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனைப்படும் உமது பிரமாணிக்க ஊழிர்களுடைய ஆத்துமத்தின் பேரில் இரக்கமாயிருந்து, அவர்கள் வேதனையை நீக்கும். இப்பொழுது உம்மைப் பரலோகத்திலும் பூலோக்திலும் சிநேகிக்கும் ஆத்துமாக்களோடு, நானும் சிநேகித்து நமஸ்கரிக்கிறேன். நிர்மல பரிசுத்த இருதயமே! என் இருதயத்திலுள்ள உலக ஆசாபாச மெல்லாம் ஒழித்து, உமது நிர்மல சிநேக அக்கினியால் நிறைந்திருக்கச் செய்யும். நன்மை நிறைந்த இருதயமே! என் இருதயத்தை முழுதும் உமது கைவசப்படுத்தும். என் சேசுவின் சிநேகத்தை விட்டு என்னைப் பிரிக்கவருகிறது யாரென்று உண்மையாகவே நான் சொல்லச் செய்யும். எனக்கு இவ்வுலகத்தில் வரும்துன்ப துரிதங்களை எல்லாம், நான் உம்மைப் பற்றிப் பொறுமையோடு அனுபவிக்கும்படி, நீர் உலகத்தில் அத்தனை வருஷம் என்னைப்பற்றி எனக்காக அனுபவித்த துக்கம் கஸ்தி முதலானவைகளை எல்லாம், என் அற்ப இருதயத்தில் பதிந்திருக்கச் செய்யும், மிகுந்த தாழ்ச்சியும் சிறவணத்திலும், எனக்குப் பங்கு கட்டளையிடும். உமக்குச்சித்தமானதை மாத்திரமே நான் ஆசைப்படும்படி, என் இருதயத்தை உமது வசமாக்கியருளும். மதுரமான சேசுவின் திரு இருதயமே! உமது மதுர சிநேகத்திற்கு விரோதமான குணம் என்னிடத்தில் இல்லாதபடி, உமது திவ்விய மதுர குணத்தில் எனக்குப் பங்கு கட்டளையிடும். உம்மை சிநேகிக்கவும், உமக்குக் கீழ்ப்படியவும், உமக்குப் பிரியப்பட நடக்கவும் மாத்திரமே நான் உலகத்திலிருக்கச் செய்யும். நீர் என்னை சிநேகிக்கும் அளவிறந்த சிநேகத்திற்கும், எனக்குச் செய்துவரும் மட்டற்ற உபகாரத்திற்கும் பதிலாய், நான் உம்மிடத்தில் வைக்கும் சிநேகப்பெருக்கத்தால் உலர்ந்துபோனால் என்ன!
மனவல்லயச் செபம்:
சேசுவின் திரு இருதயமே! நீரே என் இருதயத்தைத் திருக்கோயிலாகக் கொண்டருளும்.
தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:
நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்.
தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.
சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.
பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)
நிந்தை பரிகாரச் செபம்:
எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.
தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.