"என் அன்புக்குரியவளே, என் சௌந்தரியே, எழுந்து விரைந்து வா" (உந்நத கவி: 2ம் அதிகாரம்) "சேசுநாதர் தேவ நற்கருணையில் தம்மைச் சந்திக்க வருகிற ஆத்துமத்தைப் பார்த்து நீ நம்மை சிநேகிக்கிறதினாலும், சிநேக பாசம் நம்மிருவரையும் பிணைத்திருப்பதினாலும் நமது பத்தினியே, நமது இஷ்டப் பிரசாதத்தினால் அலங்கரிக்கப்பட்ட சௌந்தரியே, இன்னும் அதிகமான இஷ்டப் பிரசாத நன்மைகளை அடையும்படி உன் நிர்ப்பாக்கியத்தை விட்டு எழுந்திரு. நமது மகிமைப் பிரதாபத்தைக் கண்டு நீ பயந்து நமது அருகில் வராமல் பின் வாங்கிப் போகிறாய் என்று தேவநற்கருணையில் மறைந்திருக்கிற நம்மிடத்தில் தினம் நம்பிக்கையோடு வா. உன்னை நாம் பட்சத்தோடு கட்டி அரவணைக்துக் கொள்ளவும், நீ நம்பிக்கையோடு கேட்கும் மன்றாட்டுகளைத் தயவோடு கொடுக்கவும் காத்திருக்கிறோம் என்று திருவுளம் பற்றுகிறார். மகிமைப் பிரதாபமுள்ள இராசா வானவரிடத்தில் நாம் அதிக நம்பிக்கையோடு அடுத்துப் போகும் படி, அவர் தமது மகிமைப் பிரதாபமெல்லாம் அப்பத்தின் குணங் களில் மறைத்துக் கொண்டிருக்கிறார்" என்று அர்ச்சியசிஷ்ட தெரேசம்மாள் வசனித்திருக்கிறாள். ஆகையால் மகா சிநேகத் தோடும் நம்பிக்கையோடும் சேசுநாதரை அடுத்து போய் அவரோடு ஒன்றித்து அவர் இஷ்டப் பிரசாதங்களைத் தந்தருள வேண்டு மென்று மன்றாடுவோம்.
செபம்:
என் பேரில் வைத்த சிநேகத்தால் மனிதனாகப் பிறந்து அப்பத்தின் குணங்களில் மறைந்திருக்கும் நித்திய வார்த்தையான ஏக சுதனே! நீர் தேவனுமாய் மட்டற்ற மகிமைப் பிரதாபமுள்ள வருமாய் அளவற்ற நன்மை நிறைந்தவருமாய், என் ஆத்துமத்தின் பேரில் பட்சமுள்ளவருமாயிருக்கிறீர். உமது திருச் சமூகத்தில் நானிருக்கிறேன் என்கிறதினால் எனக்கு எத்தனை ஆனந்தம், சந்தோஷம் உண்டாகவேண்டியிருக்கிறது. ஆண்டவரை சிநேகிக்கும் ஆத்துமங்களே, நீங்கள் பரலோகத்திலாவது பூலோகத்திலாவது எங்கேயிருந்தாலும் எனக்காக ஆண்டவரை சிநேகியுங்கள். அழகிய சிநேகத்தின் மாதாவான அர்ச்சியசிஷ்ட மரியாயே, என் சர்வேசுரனின் தாயே, என் அம்மா, என் ஆண்டவரை நான் நேசிக்க எனக்கு உதவியாயிரும். சிநேக தேவனான சேசுவே! நீரே என் சிநேகத்திற்கு விஷயமாயிரும். என் மனதை உம்மில் முழுதும் ஐக்கியப்படுத்தி என்னை முழுதும் உமது கைவசப்படுத்திக்கொள்ளும். என் புத்தி இடைவிடாமல் உம்மைத் தியானிக்கவும், நான் உமக்குப் பிரியப்பட என் சரீரம் உதவியாயிருக்கவும் என் ஆத்துமம் முழுதும் உமது சொந்தப் பொருளாய்த் தானே இருக்கவும் வேண்டும் என்கிறதைப் பற்றி என் மனம், சித்தம், புத்தி, சரீரம், ஆத்துமம் இவை முழுதும் உமது பாத காணிக்கையாக வைக்கிறேன். என் ஆசைக்குரிய அன்பரே, மனிதர் பேரில் உமக்குள்ள அளவிறந்த சிநேகத்தை அறிந்து சகல மனிதரும் உம்மை சிநேகிக்கவும், உமக்குப் பிரியப்பட நடக்கவும் ஆசைப்படுகிறேன். நான் உமது ரூபலாவண்யத்தைக் கண்டு, உமது பேரில் ஞான ஆசை கொண்டு, உமது சிநேகம் அக்கினி மயமாய்ப் பற்றி எரியவும், உமக்குப் பிரியப்பட என்னால் செய்யக் கூடுமானதெல்லாம் குறைவில்லாமல் செய்யவும், உமது ஊழியத்தில் என்ன பிரயாசைப்பட வேண்டியிருந்தாலும், உயிரை முதலாய்ச் செலவழிக்க வேண்டியிருந்தாலும் அசட்டையில்லாமல் செய்து வரவும் ஆசைப் படுகிறேன். என் சர்வேசுரா, என் பாக்கிய சம்பத்தே, என் சிநேகிதமே, என் சகல நன்மையே நான் உம்மை அடைய மற்றெல்லாம் இழந்தால் எவ்வளவு பாக்கியம்.
மனவல்லயச் செபம்:
சிநேகத் தன்மையான சேசுவே! என்னை முழுதும் உமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும்.
தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:
நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்.
தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.
சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.
பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)
நிந்தை பரிகாரச் செபம்:
எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.
தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.