"நீர் மெய்யாகவே மறைந்திருக்கும் தேவனாயிருக்கிறீர்" (இசையாஸ்: 45-ம் அதிகாரம்.) நித்திய வார்த்தையான தேவசுதன் மனித சுபாவத்தைப் பரிக்கிரகம் செய்யத் தமது தேவ சுபாவத்தை மறைத்து உலகத்தில் சஞ்சரித்தார். ஆனால் அர்ச். பெர்நார்து வசனித்ததைப்போல, அவர் நம்மிடத்தில் வைத்த சிநேகப் பெருக்கத்தைக் காண்பிக்கத் தேவநற்கருணை வழியாய் நம்மோடு கூட உலகத்தில் வாசமாயிருக்கத் திருவுளமாகித் தமது மனித சுபாவத்தைக் குறித்து, அப்பத்தின் சாயலை மாத்திரம் காண்பித்துக் கொண்டு இருக்கிறார் என்கிறதினால், மேற்சொன்ன வேத வாக்கியம் மெய்யாகவே தேவநற்கருணையில் அதிகமாய் நிறைவேறுகிறது.
செபம்
என் ஆத்தும நேசரான கர்த்தாவே, நீர் மனிதரிடத்தில் வைத்த மட்டில்லாத சிநேகத்தை நான் எள்ளளவாகிலும் உற்று விசாரிக்குமிடத்தில், ஆச்சரியத்தால் பிரமித்து வாய் அடைத்து நிற்கவேண்டும். சேசுவே! நீர் மனிதர்பேரில் வைத்த சிநேகப் பெருக்கத்தால் உமது மகிமைப் பிரதாபமெல்லாம் மறைந்து மகா ஈனத்திற்கெல்லாம் உள்ளாகி, உமது தேவ ஜீவியத்தை அழித்துக் கொண்டீர். தேவரீர் பீடத்தில் எழுந்தருளி இருக்கும்பொழுது மனிதரை சிநேகிக்கிறதும், மனிதர்பேரில் உமக்குள்ள சிநேகப் பெருக்கத்தை மனிதருக்கு காண்பித்து வருகிறதும் அல்லாமல் உமக்கு வேறு தொழில் இல்லாததுபோல் காண்கிறது. உமது மகிமையை மறைத்து மனிதர் பிரயோசனத்தை மாத்திரமே தேடித் திரிந்து மனிதர் சிநேகத்தால் தயங்கி நிற்கும் தேவசுதனே, நீர் மனிதர் பேரில் வைக்கும் சிநேகத்திற்குப் பதிலாக மனிதர் என்ன சிநேகம் காண்பிக்கிறார்கள்? மனிதர் உம்மைச் சிநேகியாமல் போகிறதும் அல்லாமல், உம்மை எத்தனை நிந்தை அவமானப் படுத்துவார்கள் என்று அறியாமல் போனீரே! தேவநற்கருணையில் நீர் எவ்வாறு எழுந்தருளி இருக்கிறீரென்கிறதை அறியவும், உமக்கு ஆராதனை செய்யவும் அநேகமாயிரம்பேர் அசட்டை செய்வார்கள் என்கிறதை என்னைவிடத் தேவரீர் அதிக நன்றாய் அறிந்திருக் கிறீர். உம்மால் இத்தன்மையாய் சிநேகிக்கப்படும் மனிதர், உமது பேரில் எவ்வளவு கோப மூர்க்கங் கொண்டு உமது சிநேக தேவத் திரவிய அனுமானமாகிற தேவநற்கருணையைச் சாவான பாவத்தினால் விசுவசிக்காமல் போகிறார்கள். உம்மை விசுவசிக்கறவர்களில் எத்தனை ஆயிரம் பேர் நீர் படும் நிந்தை அவமானத்திற்குத் தங்களால் ஆனமட்டும் பரிகாரம் செய்ய நினையாமலும், உம்மைச்சந்திக்க வர நினையாமலும் உம்மைத் தனிமையாய் விட்டுப்போகிறார்கள். சிலபேர் உம்மை வணங்கி நமஸ்கரிக்க வருகிறவர்கள் போல உமது ஆலயத்தில் வந்து, ஒரு ஆராதனை வழிபாடுமில்லாமல் உம்மை அவமானம் செய் கிறார்கள். நன்மை நிறைந்த கர்த்தாவே! நீர் தேவநற்கருணையில் அவமானப்படும் இடமெல்லாம் என் கண்ணீரினாலும், இரத்தத் தினாலும் நான் கழுவித்துடைக்கக்கூடுமானால் அல்லோ தாவிளை. நான் என் இரத்தத்தைச் சிந்தி உமக்குப் பரிகாரம் செய்யப் பாத்திரமாகாதவனாயிருந்தாலும், நீர் தேவநற்கருணையில் மனிதரால் படும் அவமானத்திற்குப் பரிகாரமாக நான் உம்மை அடிக்கடி தேவநற்கருணையில் சந்திக்கத் துணிந்திருக்கிறேன். நித்திய பிதாவே! உமது திருக்குமாரன் அனுபவிக்கும் நிந்தை அவமானத்திற்கு நீசப்பாவியாயிருக்கற அடியேன் செய்யும் அற்ப பரிகாரத்தைப் புறக்கணித்துத் தள்ளாதேயும். சேசுகிறீஸ்துநாதர் சிலுவை மரத்தில் உமக்குச் செய்த பரிகாரத்தையும், தேவ நற்கருணையில் எப்பொழுதும் செய்துவரும் பரிகாரத்தையும் கையேற்றுக்கொள்ளும். சேசுவே! உமது சிநேக தேவத்திரவிய அனுமானத்தின் பேரில் சகலருடைய இருதயத்திலும் சிநேக அக்கினியை எரியச் செய்தாலல்லோ தாவிளை.
மனவல்லயச் செபம்:
சிநேக தேவனான சேசுவே, சகலரும் உம்மை அறிந்து சிநேகிக்கச் செய்யும்.
தேவ நற்கருணையின் சந்நிதியில் வேண்டுதல்:
நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்கத் தயை புரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்திற்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்தோடு ஆராதிக்கிறேன். பரம திவ்விய நற்கருணையிலிருக்கிற உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், தேவரீர் அடியோர்கள் பேரில் காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழு மனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிக் கெட்டதனத்தின் பேரில் மிகுந்த விசனப்பட்ட அநந்த மகிமை யுள்ள பரம தேவனே, ஆராதனைக்குரிய இந்தத் தேவதிரவிய அனுமானத்திலிருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனிச் செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப் பட்சத்தோடும் உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன். ஆ என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேகம்முறை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைவாய் நடந்ததற்கும், தேவபக்தி, சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை பெற்றுக் கொண்டதற்கும் அடியேன் படுகிற மிகுதியான வியாகுலத்தைத் தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்.
தயவுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவத் துரோகங்களைப் பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமீ. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும் எல்லோருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் சுவாமீ. மெய்யாகவே சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து, தோத்தரித்து, வந்தித்து, வணங்க ஆசிக்கிறேன். மேலும், நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்த திருச் சரீரத்தையும், விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ - நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்தோடு நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு பெற்றுக்கொள்கிற தினாலும் உம்முடைய கிருபையை அடைந்து, எம் மரணத்திற்குப் பின்பு சகல மோட்சவாசிகளோடு கூடப் பேரின்பப் பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படியாக எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.
சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர் அடியோர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்திலும் தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உந்நத ஸ்தலத்திலும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. சிலுவையிலிருந்து எங்கள் திவ்விய இரட்சகரும் மனுஷாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் குரல் உம்மை நோக்கி கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமீ. தேவரீர் உம்முடைய கோபத்தினை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாக்ஷம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே, அதிக தாமதம் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு, உம்முடைய திரு நாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திர மாகத்தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.
பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஆராதனையும், ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (இப்படி மும்முறை சொல்லவும்.)
நிந்தை பரிகாரச் செபம்:
எங்கள் திவ்விய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் திரு இருதயமே! நாங்கள் மிகவும் நீசப்பாவிகளாயிருந்தாலும் உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உமது சந்நிதியில் பயபக்தியுள்ள வணக்கத்துடனே சாஷ்டாங்கமாக விழுந்து நீர் எங்கள் பேரில் இரக்கமாயிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றிக்கெட்டத்தனத்தையும் நினைத்து மிகவும் மனஸ்தாபப்படுகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களால் இயன்ற மட்டும் அவைகளுக்குப் பரிகாரம் செய்யவும் துணிகிறோம் சுவாமீ. அடியோர்கள் உமக்குச் செய்த தோஷ துரோகங்களுக்காகவும், புறவினத்தார், பதிதர், பொல்லாத கிறீஸ்துவர்கள் முதலானவர்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும், மிகுந்த துக்க மனஸ்தாபப்பட்டு அவைகளை தேவரீர் பொறுக்கவும், சகலரையும் நல்வழியில் திருப்பி இரட்சிக்கவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். உம்முடைய திரு இருதயத்துக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரேர்கங்களுக்குப் பரிகாரமாக அற்பமாகிய எங்கள் ஆராதனை வணக்க தோத்திரங்களையுமல்லாமல் மோட்சத்தில் வாழுகிற சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர் களின் ஆராதனைப் புகழ்ச்சிகளையும், பூலோகத்திலுள்ள சகல புண்ணியாத்துமாக்களின் ஸ்துதி நமஸ்காரங்களையும் மிகுந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீருக்குச் செலுத்துகிறோம். எங்கள் திவ்விய சேசுவே! எங்களுக்கு ஏக நம்பிக்கையே! அடியோர்கள் எங்களை முழுதும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்முடைய திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம் சுவாமீ. தேவரீர் எங்களிருதயத்தை உமது கைவசமாக்கிச் சுத்தப்படுத்தி அர்ச்சிய சிஷ்ட இருதயமாகச் செய்தருளும். நாங்கள் உயிரோடு இருக்கு மட்டும் எங்களைச் சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலிருந்து காத்துரட்சியும் சுவாமீ.
தேவரீர் சகல மனிதருக்காகவும் சிலுவைமரத்தில் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளைத் தந்தருளும் சுவாமீ. ஆமென்.